search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் கல்விக்குழு"

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.
    தூத்துக்குடி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களுக்கு தேர்தல் கல்விக்குழு தொடர்பான பயிற்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது;-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக 67 பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது.

    18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். வாக்காளர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும், கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு, இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

    பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்விக்குழுவின் செயல்பாடுகளை தொடர்பு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கண்காணித்து குழுவின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். எதிர்வரும் தேர்தலில் தகுதிவாய்ந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு விழிப்புணர்வுகள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவினை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், தேர்தல் தாசில்தார் நாகராஜன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பள்ளிக்கல்லூரி தேர்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    ×